2015 - ம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி எனக்கு முதல் காட்சி ஆர்வத்துடன் அள்ளிய நூல்களில் என்னைக் கவரந்த கருத்துக்களை உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் ஆனந்தமே!
ஞானி ஜ+ன்னாயிது தனது சீடர்களுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். வழியில் எந்த கிராமமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் வெட்டவெளிதான் இருந்தது. தலைக்கு மேலே வெய்யில் சுட்டெரித்தது.
காற்று அனலாய் தகித்தது. எங்காவது ஒதுங்கி இளைப்பாறலாம் என்றால் மரம் செடி கொடிகள் எதையுமே மருந்துக்கும் அங்கே காணமுடியவில்லை.
பசியோ அவர்களது உடலை தள்ளாட வைத்தது. தாகமோ தொண்டையை வறட்டியது. மயக்கம் போட்டு விழாத குறையாக சீடர்களின் கால்கள் ஒன்றோடொன்று அடிக்கடி பின்னிக் கொண்டதால் தடுமாறியபடி அவர்கள் மெல்ல நடந்தனர்.
உணவோ தண்ணீரோ கிடைப்பதற்கான எந்த வழியும் அவர்களுக்குத் தெரியவில்லை. வீடுகள் ஏதாவது தென்பட்டால் தண்ணீராவது அருந்தலாம். எதற்கும் வழியின்றி குட்டி பாலைவனம் போன்ற அந்த இடத்தில் பயணம் செய்யவேணடடிய நிலை.
நாள் முழுதும் கழிந்தது இப்படியே. மெல்ல மாலை மறைந்து இருட்டத் துவங்கியது. வழியில் ஒரு விசாலமான மரம் தென்பட்டது. சீடர்களின் மனநிலை அறிந்த குரு இரவை இங்கேயே கழிப்போம் என்றார். மறுகணமே அடித்துபோட்டாற்போல் அனைவரும் அங்கேயே சுருண்டு படுத்து விட்டனர்.
எப்போதும் உறங்குவதற்கு முன்பாக இறைவனை நோக்கி பிரார்தனை செய்வது குருவிற்கு வழக்கம். அந்த நாளின் நல்லது கெட்டதுகளுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதும் மன்னிப்பு வேண்டுவதும் அந்தப் பிரார்த்தனையின் போது நடக்கும்.
அன்றும் வழக்கம்போல் தொழுதுவிட்டு பிரார்த்தனை செய்த குரு இறைவா! இன்று தாங்கள் அளித்த அனைத்திற்கும் மனப்பூர்வமான நன்றி என்றார். இதைக் கேட்டதும் அருகே இருந்த சீடன் குருவே! இறைவன் இன்று நமக்கு ஒன்றுமே தரவில்லையே என்றான் கவலையுடன்.
யாரப்பா சொன்னது? என்றார் குரு புன்னகையுடன். இறைவன் இன்று நமக்கு அருமையான பசியை அளித்தார் அற்புதமான தாகத்தை அளித்தார். அதற்காகத்தான் நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். என்றார்.
இதுதான் உலகம் போற்றும் சூஃபி ஞானம் என்பது. எது எப்படி உள்ளதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது. மனம் என்ற ஒன்று நம்மிடம் உள்ளவரை மனத்தில் நான் என்பது இருக்கும். அந்த நான் எனும் உணர்வானது ஒவ்வொன்றையுமே தனக்கு விரும்பிய விதத்தில்தான் கற்பனை செய்யும் . நிஜமான உண்மை அந்த கற்பனைக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் மனம் உண்மையைத்தான் தூக்கி எறியுமே தவிர தனது கற்பனைகளை விட்டுத் தரவே செய்யாது.
No comments:
Post a Comment