Saturday, May 30, 2015

ஆன்மீகக் கதை - 2

     உண்மையைத் தேடிய ஒருவன் ஞானி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது வீட்டிற்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிட சைத்தான் முடிவு செய்தான்.

    அதனால் ஞானியின் வீட்டுக்குள் நுழையமுடியாதபடி அந்த மனிதனுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன. அழகிய பெண்ணொருத்தி அவனை அணுகி இன்முகத்துடன் கொஞ்சு மொழியில் பேசினாள். சரசமாடித் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்றதுமே சட்டென சுய உணர்வு பெற்றவனாக அவளிடமிருந்து விடுபட்டு திரும்பி விட்டான். அவ்வாறு திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனைக் கண்டு பேசினார். தனது அரண்மனைக்கு வரும்படி அவனை அன்புடன் அழைத்தார்.

    அந்த சமயத்தில் சாத்தான் தன்னிடம் இருந்த அத்தனை விதமான அஸ்திரங்களையும் ஒன்றுவிடாமல் எய்தான். பொருள், காமம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அத்தனையும் அணிவகுத்து நின்று ஒன்றன்பின் ஒன்றாக அவனைத் தாக்கின. எனினும் எதனாலும் அவனது உறுதியை அசைக்க முடியவில்லை.

    எந்த மயக்கங்களுக்கும் ஆட்படாமல் இயல்பாக அவற்றையெல்லாம் உதறிவிட்டு ஞானியிடம் வந்து சேர்ந்தான். தனது அத்தனை ஆயுதங்களும் செயலற்றுப் போய் சைத்தான் ஒரு மூலை இருட்டில் சோர்ந்து போய் ஒடுங்கினான்.

    ஞானியிடம் வந்து நிமிர்ந்து பார்த்த அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தான். இவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க இவரைச் சுற்றி சீடர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கணமான அடக்கம் இவரிடம் இல்லையே என்று எண்ணினான் அவன்.

    ஞானி இவன் வந்ததை கவனிக்கவில்லை. அங்கிருந்த எவரும் இவனைப் பொருட்படுத்தவும் இல்லை. வந்தவரை வரவேற்பது இன்சொல் கூறுவது என்ற எந்த நல்ல பழக்கமும் இல்லை அவரிடம் என்று எண்ணினான் அவன்.

   சற்று நேரம் மவுனமாக அங்கே நடப்பனவற்றைக் கவனித்தான். ஞானியின் பேச்சில் உயர்ந்த தத்துவங்களோ கோட்பாடோ ஏதும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசிகூட இதைவிட சிறப்பாகவே பேசுவான்.

    என்று எண்ணிய ஞானியின் உடை பேச்சு செயல்பாடுகள் எதிலுமே ஒரு சராசரி மேதைக்குரிய இலக்கணங்கள் கூட இல்லை. எப்படி இவரை எல்லோரும் ஞானி என்று கூறுகிறார்கள்.

    அவனுக்குள் மெல்லிய ஏளனப் புன்னகை எழுந்தது. 'மக்கள் மடையர்கள். யாரையாவது தொழுது வணங்க வேண்டும். அதற்காக எந்த பரதேசியையாவது பிடித்துக் கொண்டு தொங்குவார்கள் எல்லாக் காலங்களிலும்' என்று நினைத்தவாறு ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக வந்த வழியே வெளியேறினான் அந்த மனிதன். அவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூலையில் உற்றுப் பார்த்தார். ' நீ இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதே இல்லை. அவன் தொடக்கத்திலிருந்தே உன்னுடையவன்தான்' என்றார் சாத்தானிடம் சிரித்தபடியே.


    இறைவனைத் தேடும்போது பொருள், புகழ், பெருமை, ஆசை எல்லாவற்றையும் உதறத் துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படிதான் இருப்பார் என்று தங்கள் மனதில் தாங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துகளிலிருந்து விடுபட மாட்டார்கள் என்பதை விளக்கும் அற்புதமான கதை இது.

நன்றி - சூஃபி கதைகள்